Thursday, 6 February 2014

அதிகம் கையடக்க தொலைபேசியில் பேசுவோர் கவனத்திற்கு !

இன்றைய அறிவியல் உலகம் தகவல் தொடர்பு தொழில் நுட்பங்களின் மூலம் மிக உன்னதமான பிணைப்பை உலக மக்களிடையே எளிமையாக்கிவிட்டது. 
கண்ணிமைக்கும் நேரத்தில் கடல் கடந்து பறக்கும் குரல் ஒலிகளின் ஒப்புயவர்வற்ற செயல்பாடுகளுக்கு செல்பேசி முக்கிய பங்காகிவிட்டது. காடுகள் மேடுகள் எல்லாம் உழைத்து களைத்துப்போன ஏழைமக்கள் வாழும் குடிசைப்பகுதிகளின் சந்து பொந்துகளிலெல்லாம் சந்தடியில்லாமல் நுழைந்து சாகசம் படைத்து அவர்தம் வாழ்க்கைத் தொடர்பை வலுவாக்கி வருவதும் செல்பேசிகளே. செல்போன்களின் சேவைகள் நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே செல்கின்றன. 
2005 – ஆண்டு கணக்கெடுப்பின்படி உலகில் இதனை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 126 கோடியாக இருந்தது என்றும் அது, நாளொன்றுக்கு 46000 பேர் வீதம் புதிதாக அதிகரித்து வருவதாகவும் கணக்கிட்டுள்ளனர்.

இங்ஙனம் பரவிவரும் செல்பேசிகளின் பயன்பாடுகள் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் கேடுகள் விளைவிக்கின்றன என்பதனை சமீபத்திய அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. 
இயற்கையின் இயற்கையான கதிர்வீச்சுகளிடையே அறிவியல் கண்டுபிடிப்புகளாகிய ஒயர்லெஸ், ரேடியோ, டிவி, ரேடார், செல்போன்கள் இவைகளின் இயக்கத்தால் வெளிவிடப்படும் ரேடியோ அலைகள், கதிரியக்க அதிர்வுகள், நுண்ணலை அதிர்வுகள், நுண்ணலை கதிர்வீச்சுகள் போன்றவை உயிர்களின் மீது பல்வேறு தீயவிளைவுகளை உருவாக்கி வருகின்றன. 

இதில் இன்றைய செல்பேசிகளே அபரிமிதமான விளைவுகளை ஏற்படுத்துகின்றன என்பதனை அறிய முடிகிறது. இதுபோலவே செல்பேசி “டவர்களும்” மிகவும் ஆபத்தானவை தான். அவற்றிலிருந்து வரும் பாதுகாப்பற்ற நுண்ணலை கதிர்வீச்சுகளில் சுமார் 60%, தலைப்பகுதிகளில் கிரகிக்கப்பட்டு, கொஞ்சம் மூளையினுள் ஊடுருவி செல்வதாக கண்டறிந்துள்ளனர். 

சிறுகுழந்தைகள் செல்பேசிகளை பயன்படுத்துவது மிகவும் பாதிப்பான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதனையும் பிரிட்டீஷ் தேசிய கதிரியக்க பாதுகாப்புக்கழகம் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளது. பெரியவர்களைவிட குழந்தைகளை 3.3 மடங்கு கதிர்வீச்சுகள் அதிகமாக பாதிக்கின்றன என்றும், குழந்தைகளின் மண்டைஓடுகள் மிகவும் மெல்லிய தன்மையுடையதாக இருப்பதால் அவை ஆபத்தான கதிர்வீச்சுகளினால் எளிதாக பாதிக்கப்படுவதால் 30 முதல் 40 வயதிற்குள் பெரும்பாலோருக்கு மூளைக்கட்டிகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளன என்றும் உறுதிபடுத்தியுள்ளனர். செல்பேசிகளின் தீயவிளைவுகள் பற்றி பல்வேறு நாட்டைச் சேர்ந்த அறிவியல் அறிஞர்களின் தீவிர ஆய்வுகளில் பல உண்மைகள் வெளியாகி உள்ளன. இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்த “ராப்பாபோல்ட் மருத்துவ அறிஞர்கள் அமைப்பு” செல்பேசி கதிர்வீச்சுகளை விலங்குகளில் பரிசோதனை செய்ததில் அவற்றின் கண்கள் வெகுவாக பாதிக்கப்படுவதாக கண்டறிந்துள்ளனர். கண்களுக்கு அருகில் செல்பேசி கதிர்வீச்சு செல்லும்போது வெப்பநிலை சுமார் 3டிகிரி செல்சியஸ் அதிகரிப்பதால் கண்புரை நோய்கள் எளிதில் (Cataract) உருவாவதனை கண்டுபிடித்துள்ளனர். 

அமெரிக்க அறிவியலறிஞர்கள் மேற்கொண்ட பல்வேறு ஆய்வுகளின்படி செல்பேசி பயன்படுத்துபவர்கள் பெரும்பாலோர் ஆண்மைக்குறைவு, விந்தணுக்குறைவு, மகப்பேறின்மை போன்ற ஆபத்திற்குள்ளாவதை கண்டுபிடித்துள்ளனர். இந்தியாவில் மும்பையைச் சேர்ந்த மருத்துவ அறிஞர்களும் பல்வேறு ஆய்வுகள் மூலம் இதை தெளிவுபடுத்தியுள்ளனர். 

சாதாரணமான மனிதர்களைவிட நாள்தோறும் குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் செல்பேசிகளை பயன்படுத்துவோரின் விந்தணு எண்ணிக்கை 25% குறைவாகவே காணப்படுவதனை அறிவியல் ஆய்வுகள் தெளிவுபடுத்தி உள்ளன. அமெரிக்க ஓஹியோவின், கிளீவ்லேண்ட் இனப்பெருக்க மருத்துவ ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அசோக் அகர்வால் விலங்கினங்களில் மேற்கொண்ட ஆய்வுகளின்படி விந்தணுக்களை உருவாக்கும் செல்கள் மின்காந்த கதிர்வீச்சுகளினால் அல்லது அதனால் ஏற்படுத்தப்படும் வெப்பத்தினால் பாதிக்கப்படுவதனை கண்டறிந்து வெளியிட்டார். செல்பேசிகளை இடுப்பு பகுதியில் வைத்திருப்பவர்களின் அடிவயிறு, தொடையிணைப்பு பகுதிகள் எளிதில் சூடாவதும் இத்தகைய பாதிப்புகளுக்கு காரணமாகும். 
அன்னாள் நரம்பியல் ஆய்வுகளும், டாக்டர் பாவ்லோ ரோஷினியின் ஆய்வுகளும் செல்பேசி கதிர்வீச்சுகள் மூளைசெல்களை தூண்டுகின்றன என்பதனை வெளிப்படுத்தியுள்ளன. இத்தகைய தூண்டுதல்கள் காக்கைவலிப்பு போன்ற விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ளார்.
சுவீடன் தேசிய உழைப்பாளர் வாழ்வு மையம் வெளியிட்டுள்ள ஆய்வாளர்களின் அறிக்கையின் படி 2000 மணி நேரத்துக்கு மேல் செல்பேசியை பயன்படுத்திய 905 முதியவர்கள் மூளைப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதனை வெளிப்படுத்தியுள்ளனர். சாதாரணமாக செல்பேசி பயன்படுத்தாதவர்களை விட 3.7 மடங்கு அதிகமாக செல்பேசி பயன்படுத்துவோர் பாதிக்கப்படுகின்றனர் என்பதையும் ஒப்பிட்டுள்ளனர்.

இலண்டன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் – மூன்று பிரிட்டிஷ் பல்கலை கழகங்களுடன் சேர்ந்து நான்கு ஆண்டுகளாக மேற்கொண்ட ஆய்வு முடிவுகள் படி அதிக செல்பேசி பயன்பாடு உடல் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதை கண்டறிந்துள்ளனர்.
எனவே செல்பேசி பயன்படுத்துவோர் குழந்தைகளிடம் செல்பேசிகளை கொடுப்பதை தவிர்க்கவும்.


செல்பேசி வைத்திருப்போர் கவனத்திற்கு :
பேசும்போது உடலுக்கு சற்று தொலைவில் வைத்து பேசுவதும், வாய்ப்புகள் உள்ளபோது சாதாரண தொலைபேசிகளை பயன்படுத்துவதும். வாகனங்களில் செல்லும்போது கண்டிப்பாக செல்பேசி தொடர்புகளை தவிர்ப்பதும், அதிகமாக சூடாகும் வரை பேசுவதை தவிர்ப்பதும். செல்பேசி பயன்படுத்துபவருக்கு மிகவும் பாதுகாப்பானதாகும்.

0 comments:

Post a Comment