Monday, 10 February 2014

இரண்டு இந்திய நிறுவனங்களை வாங்கும் ஃபேஸ்புக், கூகுள்

பெருநிறுவனங்களான ஃபேஸ்புக்கும் கூகுளும் இரண்டு இந்தியச் சிறு நிறுவனங்களை வாங்கியுள்ளன. இதனால் இந்தியாவில் தொழில் முனைப்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம்.
 பெங்களூரில் சுமார் ஒன்றரை வருடமாக இயங்கிவரும் Little Eye Labs என்ற மொபைல் அப்ளிகேஷன்களை அலசும் டூல்களைத் தயாரிக்கும் நிறுவனத்தை ஃபேஸ்புக் வான்ங்கியுள்ளது. இதற்கு அவர்கள் சுமார் 10 முதல் 15 மில்லியன் டாலர்கள் தந்திருப்பார்கள் என்று நம்பப்படுகிறது. இந்திய நிறுவனம் ஒன்றை ஃபேஸ்புக் வாங்குவது இதுவே முதன்முறை!
அதேபோல், கூகுள் Imperium என்ற சைபர் பாதுகாப்பு நிறுவனத்தை வாங்கியுள்ளது. பெங்களூர் மற்றும் கலிஃபோர்னியாவில் மூன்று ஆண்டுகளாக இயங்கும் நிறுவனம் இது.  இணையத்தில் எரிதம், ஏமாற்று மற்றும் தாக்குதல்களைத் தடுக்க உதவுகிறது இந்நிறுவனம். இதன் விலை 9 மில்லியன் டாலர்களாம்.
இவை இரண்டுமே பெரிய தொகைகள் இல்லை. ஆனால் இந்தியாவின்மீது பெரிய நிறுவனங்களின் கவனம் திரும்புவதற்கு இவை உதவும்.
’இது ஒரு முக்கியமான மாற்றம்’ என்கிறார் Inventus Capital Partners நிறுவனத்தைச் சேர்ந்த ருத்விக் தோஷி. ‘இதுவரை இந்தப் பெரிய அமெரிக்க நிறுவனங்கள் இந்திய நிறுவனங்களை அதிகம் வாங்கவில்லை. இவர்கள் வாங்கிய இந்த நிறுவனங்கள் வெற்றிகரமாக அமைந்தால், பெரிய நிறுவனங்கள் இந்தியாவைக் கவனிக்கத் தொடங்குவார்கள். அதிகத் திறமைசாலிகள், அதிக தொழில்நுட்பம், அதிக தொழில்முனைப்பு என எல்லாமே இங்கே நடக்கிறது. இது ஒரு புதிய தொடக்கம்.’
பல ஆய்வாளர்களும் இதனை ஏற்றுக்கொள்கிறார்கள். இந்திய ஐடி துறையிலிருந்து அமெரிக்கா செல்பவர்கள் பலர் உண்டு, அவர்கள் அங்கே கலக்க, இங்கே புதிதாகத் தொழில் தொடங்கி ஜெயிக்கிறவர்கள் பலர்.
‘இந்தியாவில் தொடங்கப்படும் பல புதிய நிறுவனங்கள் உள்ளூருக்கேற்ற தயாரிப்புகளில் கவனம் செலுத்துகின்றன’ என்கிறார் Little Eye Labsல் முதலீடு செய்த நிறுவனங்களில் ஒன்றான GSF Accelerator நிறுவனர் ராஜேஷ் சாஹ்னி. ‘இந்த இரு நிறுவனங்களைப் பார்த்து ஊக்கம் பெற்று, நம்மவர்கள் இனிமேல் உலக அளவில் புகழ் பெறக்கூடிய பயனுள்ள தயாரிப்புகளைச் செய்து கவனம் ஈர்ப்பார்கள் என்று நம்பலாம். அவர்கள் சர்வதேச அளவில் சிந்திக்கவேண்டிய நாள் வந்துவிட்டது. இந்தியாவில் உள்ள திறமைசாலி இளைஞர்கள் உலகச் சந்தைக்குப் பொருள்களைத் தயாரிக்கவேண்டும், அமெரிக்காவும் இஸ்ரேலும் அப்படிதான் ஜெயித்தன, ஜெயிக்கின்றன!’

0 comments:

Post a Comment