இது எப்படி என்றால், ஒரு வாடிக்கையாளர் உங்கள் கடைக்கு வந்து அரிசி வாங்கிச் செல்கிறார், அப்படியே பக்கத்துக்கு பால் பண்ணைக்கு சென்று பால் வாங்கிச் செல்கிறார். திடீரென பால் பண்ணையில் இட்லி மாவும் சேர்த்து விற்கிறார்கள். இது உங்களின் அரிசி விற்பனையை பாதிக்கும் , உடனே நீங்கள் தயிர் பாக்கெட்டும் சேர்த்து விற்கிறீர்கள். இது அவர்களின் பால் விற்பனையை பாதிக்கும்.
இதே போட்டி தான் தற்போது தொழில்நுட்ப நிறுவங்களுக்கு இடையே நிலவுகிறது.
தனி நபர்களுக்கும் , வணிக நிறுவனங்களுக்கும் தனது தயாரிப்புகளை விற்று வரும் போட்டியாளர்களான மைக்ரோசாப்ட் , கூகள், ஆப்பிள் ஆகிய மூன்று நிறுவனங்களும் தனது போட்டி நிறுவனத்தின் முதன்மை தயாரிப்பு அல்லது முக்கிய துணை தயாரிப்பு மென்பொருளுக்கு போட்டியாக தானும் ஒரு மென்பொருளை வடிவமைத்து வெளியிடும்.
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வருமானத்தில் பெரும் பகுதி ஆபீஸ் மென்பொருள் விற்பனையில் இருந்தே வருகிறது. இதற்க்கு போட்டியாக கூகல் டாக்ஸ் என இணையத்தில் வேலை செய்யும் ஆபீஸ் போன்ற மென்பொருளை இலவசமாகக் கொடுத்தது. இதனால் ஆத்திரமடைந்த மைக்ரோசாப்ட் பிங் ( www.Bing.com ) எனும் தேடு பொறியை உருவாக்கி 30% மக்கள் (என்னையும் சேர்த்து தான்) கூகளை விடுத்து இந்த தேடுபொறியை பயன்படுத்துமாறு செய்தது.
கடந்த வருடம் தனது ஆபீஸ் மென்பொருள் ஆப்பிள் கணினிகளில் வேலை செய்யும் வகையில் வெளியிட்டது. ஆப்பிள் கணினி வைத்திருப்போர் பொதுவாக அனைத்து மென்பொருள்களையும் பணம் கொடுத்து வாங்கும் “ரொம்ப நல்லவர்கள்” இதனால் தன் கோட்டையில் வந்து கொரளி வித்தை காட்டி மைக்ரோசாப்ட் பணம் சம்பாரிப்பதை விரும்பாத ஆப்பிள்., முழு சந்திரமுகியாக மாறி தனது iWork எனப்படும் ஆபீஸ் மாதிரியான மென்பொருளை இணையத்தில் கூகல் டாக்ஸ் போல இலவசமாக எவரும் பயன்படுத்தலாம் என அறிவித்து மைக்ரோசாப்ட் , கூகல் என இரண்டு நிறுவனங்களின் வருமானத்திற்கும் ஒரு சிறு தடையை ஏற்படுத்தியுள்ளது.
iWork மென்பொருள் பயன்படுத்த ஆப்பிள் ஐடி தேவை. இனி அந்த ஐடி நீங்கள் ஆப்பிள் தயாரிப்புகளை பயன்படுத்தாதவராக இருந்தாலும் இனி இலவசமாக அதை உருவாக்கலாம். உங்களின் iWork கோப்புகள் iCloud மேகத் தளத்தில் சேமிக்கப்படும்.